
ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இது குறித்து பி.ஏ.ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவரது வழக்கை நீதிமன்றம் எண் 1, ஐட்டம் எண் 41 ஆக எடுத்து இன்று விசாரித்தது.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
பி.ஏ. ஜோசப் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதன் பின்னரே இது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
முன்னதாக, ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல் நலம் தேறி வருவார் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில், திடீரென மரணம் அடைந்ததாக மருத்துவர்களால் சொல்லப்பட்டது. இதை அடுத்து, பின்னர் அமைந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் வற்புறுத்தலின் பேரில், இரு அணிகளும் ஒன்றாக இணைந்த பின்னர், ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை செய்ய, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.