
சென்னை பேசின் பிரிட்ஜ் பாலத்தில் தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கூவம் ஆற்றில் தவறி விழுந்த கமலேஷ் என்ற ஊழியரின் நிலை என்ன என்றே தெரியவில்லை. அவரை மீட்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல் ரயில்வே நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. மழைநீரால் கூவம் நிரம்பி வழிகிறது.
இதனிடையே, சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையால் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ளதா என ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்.
நேற்று மாலை 3 மணிக்கு சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள பாலத்தில் தண்டவாளம் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 19 வயதுடைய கமலேஷ் என்ற ஊழியரும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கமலேஷ் திடீரெனத் தவறி கூவத்தில் விழுந்துள்ளார். உடனே, பணியில் இருந்த ஊழியர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்க முற்பட்டுள்ளனர். ஆனால், இதை அங்கிருந்த ரயில்வே அதிகாரிகள் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
கமலேஷைக் கண்டுகொள்ளாத ரயில்வே அதிகாரிகள், ரயில்வே ஊழியர் ஒருவரை கமலேஷ் வீட்டுக்கு அனுப்பி கமலேஷ் வந்துவிட்டாரா என பார்த்துவர அனுப்பியுள்ளனர். அந்த ஊழியரும் கமலேஷ் வீட்டுக்கு சென்று, கமலேஷ் வந்துவிட்டாரா என விசாரித்தற்கு இல்லை என கமலேஷின் தாயார் பதிலளித்துள்ளார். கமலேஷ் வந்துவிட்டால் தகவல் கொடுங்கள் எனக்கூறிவிட்டு அந்த ஊழியர் சென்றுவிட்டார்.
நீண்ட நேரமாகியும் மகன் வீட்டுக்கு வராததால் வேலை செய்யும் இடத்துக்கு சென்ற தாய், மற்ற ஊழியர்களிடம் கமலேஷ் குறித்து கேட்டதற்கு யாருமே பதிலளிக்கவில்லை என கமலேஷின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இரவு நேரத்தில் மகனின் செருப்பும் துணியும் மட்டுமே கிடைத்தது எனவும் தனது மகனைக் கண்டுபிடிக்க ரயில்வே அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கமலேஷின் தாயார் கதறுகிறார்.
தனது தம்பியை தேடும் முயற்சியில் ஈடுபடாத ரயில்வே நிர்வாகம், அவன் கூவத்தில் தவறி விழுந்தபோது தீயணைப்புத்துறையினருக்கு தகவல்கூட அளிக்கவில்லை என கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.
கமலேஷூடன் வேலை பார்த்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் கூறுகையில், கமலேஷ் கூவத்தில் தவறி விழுந்தபோது உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்க முயன்றதாகவும் அப்போது அங்கிருந்த அதிகாரிகள் தடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால் 19 வயதே ஆன கமலேஷின் நிலை என்னவென்றே தெரியாமல் அவரது குடும்பம் தவித்து வருகிறது.
ஒரு குடும்பத்தின் தவிப்பை பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் ரயில்வே நிர்வாகம் அலட்சியமாக இருப்பது மற்ற ஊழியர்களிடையே அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.