
பிரபல நடிகரும் பா.ஜ.க கட்சியை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து ஒரு மோசமான பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
இதனால் கோபமான பெண்ணிய அமைப்புகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அவருக்கு எதிராக புகார் அளித்தனர். அதனால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் பேரில் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தனக்கு வந்த பதிவை தான் அதில் பகிர்ந்து கொண்டதாக கூறி தப்பிக்க முயன்ற எஸ்.வி.சேகர், அந்த பதிவை வெளியிட்டதற்காக மன்னிப்பு கோரினார்.
இந்த வழக்கில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்ய காவல் துறை முயன்ற போது அவர் தலைமறைவாகிவிட்டார் என தகவல்கள் வெளியாகின.
தொடர்ந்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது வாதாடிய எஸ்.வி.சேகரின் வழக்கறிஞர், ‘‘இந்த தவறுக்காக எஸ்.வி.சேகர் ஏற்கெனவே மன்னிப்பு கோரிவிட்டார். அந்தப்பதிவையும் உடனடியாக நீக்கி விட்டார். அவருக்கு வந்த செய்தியை பதிவு செய்தது தான் அவர் செய்த குற்றம்” என கூறினார்
அதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூன் 1-ம் தேதி வரை எஸ்.வி.சேகரை காவல் துறை கைது செய்யக்கூடாது. என தடை விதித்திருக்கிறது, மேலும் இது தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது