
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்பு புகாரை வாபஸ் பெற்ற அவர் மீண்டும் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சீமான் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததால் சீமான் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அப்போது இந்த வழக்கில் சீமானிடம் விசாரணை நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை கைது செய்யவும் தடை விதித்தது. மேலும் இருவரும் சமரசம் செய்து கொள்ளும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.
ஆனால் விஜயலட்சுமி தரப்பில் எந்தவித சமரசமும் வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே விஜயலட்சுமியுடன் உடனான தொடர்பை ஒத்துக் கொண்ட சீமான், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக இப்போது இந்த விவகாரத்தை தூண்டி விடுவாதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், சீமான் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி தரப்பில் சீமான் பொதுவெளியில் தன்னை தரக்குறைவாக பேசுவதாகவும், இதற்காக கூடுதல் மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்
அப்போது நீதிபதிகள் சீமான் பொதுவெளியில் விஜயலட்சுமி குறித்து பேசியதற்காக செப்டம்பர் 24ம் தேதிக்குள் அவர் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்கத் தவறினால் சீமானைக் கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். அவரிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விஜயலட்சுமிக்கும் நீதிபதிகள் உத்தரவு
மேலும் இந்த விவகாரத்தை இருவரும் சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்ளும்படியும், சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை விஜயலட்சுமி நீதிமன்றத்தில் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத்தில் உத்தரவால் சீமான் மீண்டும் நெருக்கடியில் சிக்கியுள்ளார். அவர் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.