தமிழகத்தில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது
தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஓராண்டு பயிற்சி முடித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அடிப்படையில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமனம் தொடர்பாக அறநிலையத் துறை புதிய விதிகளைக் கொண்டு வந்தது. இதுதொடர்பாக தமிழக அரசும் அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பலர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், “ஆகம விதிகளை முழுமனதுடன் முறையாகக் கற்று, தொழில் ரீதியாகப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ள கோயில்களில் அர்ச்சகர்களாகவோ, ஓதுவார்களாகவோ முடியும். எனவே தமிழக அரசின் புதிய விதிகள் மற்றும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.” என கோரியிருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2022ஆம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பில், கோயில்களில் அர்ச்சகர்கள் பணி நியமனம் தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள விதிகள் செல்லும் என்றாலும், ஆகம விதிகளை முறையாகப் பின்பற்றும் மற்றும் ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ள கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனிடையே, ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களின் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதால், இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும். ஆகம விதிகளுக்குப் புறம்பாக புதிய நியமனங்களையோ அல்லது இடமாறுதல் உத்தரவுகளையோ பிறப்பிக்கக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதன் அடிப்படையில் அர்சசகர்களை நியமிக்கிறீர்கள்? அவர்களுக்கான தகுதி என்ன? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பாஜக எம்.பி. தம்பி வருண் காந்தியை சந்தித்த ராகுல்: பின்னணி என்ன?
அதற்கு, அரசு வெளியிட்ட அரசாணை அர்ச்சகர் பயிற்சிக்கானதே தவிர அர்ச்சகர் நியமனத்துக்கானது அல்ல எனவும், ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
ஆகம கோயில்களில் அர்ச்சகர் நியமனங்களை மேற்கொள்ளாமல் தற்போதுள்ள நிலையே தொடர உத்தரவிட்டுள்ளோமே என்ற உச்ச நீதிமன்றம், தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து விட்டது.
மேலும், அர்ச்சகர் நியமனங்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்து விட்டது.
இதையடுத்து, ஆகம விதிகளுக்கு எதிராக அர்ச்சகர் நியமன விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை வருகிற ஜனவரி மாதம் 25ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது.