சொத்து குவிப்பு வழக்கு: தலைமை நீதிபதி முடிவெடுக்கலாம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

By Manikanda Prabu  |  First Published Feb 5, 2024, 5:04 PM IST

முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு எதிரான முடிந்து போன சொத்து குவிப்பு வழக்குகளை யார் விசாரிக்கலாம் என்பதை தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என தெரிவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், கடந்த ஆண்டு அவரை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யவில்லை எனக்கூறி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை பட்டியலிட்டு விசாரித்து வருகிறார். மேலும் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரின் வழக்குகளையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தொடங்கினார்.

இதனிடையே, தங்கள் மீதான வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரிப்பதற்கு தடைகோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Latest Videos

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச். ராய் மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்று தான், தனி நீதிபதி தாமாக முன்வந்து தன்னிச்சையாக விசாரித்து வருகிறாரா? அல்லது தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்று விசாரித்து வருகிறாரா? என சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த அறிக்கையில், “தமிழ்நாட்டின் முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு முன் அனுமதி கோரி தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அதற்கு முன்பாகவே விசாரிக்க தொடங்கி விட்டார். அதன்பின்னர், தனி நீதிபதியின் தானாக முன்வந்து விசாரிக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி நாளை கோவா பயணம்!

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “தனி நீதிபதி தாமாக முன்வந்து எடுத்த சொத்து குவிப்பு வழக்கில் வரைமுறைகள் பின்பற்றப்படவில்லை. தமிழ்நாட்டின் அமைச்சர்கள் மீதான வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு முன் அனுமதி கோரி தனி நீதிபதி எழுதிய கடிதத்தை தலைமை நீதிபதி பார்க்கும் முன்பே விசாரணையை தொடங்கி விட்டார் என்பது உயர் நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த அறிக்கையில் தெளிவாக உள்ளது. வரைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனில் நீதிபதியின் உத்தரவுகளும் செல்லத்தக்கவையாக இருக்காது” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், “முடித்து வைக்கப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தடை விதிக்கப்படுகிறது. ஆனால், அந்த வழக்குகளை அவர் விசாரனைக்கு எடுத்ததில் தவறில்லை. எனவே, முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் தொடர்பான முடிந்து போன சொத்து குவிப்பு வழக்குகளை யார் விசாரிக்க வேண்டும் என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவெடுப்பார். தலைமை நீதிபதி இந்த வழக்குகளை எந்த நீதிபதிக்கு வேண்டுமானாலும் மாற்றலாம்.” என உத்தரவிட்டது.

click me!