அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோ தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்துள்ள உச்ச நீதிமன்றம் மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதியமைச்சராக இருந்தபோது, செய்தியாளர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடுவதாக கூறப்படும் ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். “உதயநிதியும், சபரீசனும் ஒரே வருடத்தில், அவர்களது மூதாதயரை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். இப்போது அது பிரச்சினையாகி வருகிறது. இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி, 20 கோடி என சிறுக சிறுக குவித்தது, தற்போது தோராயமாக ரூ.30,000 கோடி இருக்கும்” என அந்த ஆங்கில ஆடியோ உரையாடலுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டது.
இது பெரும் சர்ச்சையான நிலையில், அந்த ஆடியோ முழுக்க முழுக்க போலியானது என மறுப்பு தெரிவித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அறிவியல் பூர்வமாக விளக்கம் ஒன்றையும் அளித்திருந்தார்.
இதனிடையே, இந்த ஆடியோ குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பிரானேஷ் ராஜமாணிக்கம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்து செல்ல அமலாக்கத்துறை தீவிரம்!
அப்போது, அரசியல் காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தாதீர்கள் என கூறி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், கிரிமினல் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க போதுமான வாய்ப்பு இருக்கும்போதும், நீதிமன்றத்தை அரசியலுக்கான தளமான பயன்படுத்தக் கூடாது எனவும் மனுதாரருக்கு அப்போது தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக, பிடிஆர் ஆடியோ குறித்து விசாரிக்க வேண்டும் என நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகம், பாரிமுனையில் உள்ள மத்திய லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகம் உள்ளிட்டவற்றில் புகார் அளிக்கப்பட்டது. அத்துடன் ஆளுநரை சந்தித்தும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.