
திருச்சி
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவுத் தெரிவித்து வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், மற்ற மாநிலத்து மாணவர்களும் கலந்து கொண்டு தமிழக விவசாயிகளுக்கு ஆதரவுத் தெரிவித்தனர்.
விவசாயி ஐயாக்கண்ணு தலைமையில், டெல்லியில், “விவசாயிகள் கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24-வது நாளாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
விவசாயிகளின் இந்த்ப் போராட்டத்திற்கு தமிழகத்தின் மக்கள், இளைஞர்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் என ஆதரவுத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், துறையூரை அடுத்த கண்ணனூரில் தனியார் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவுத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தின் முன்பு அமர்ந்து விவசாயத்தை ஆதரித்தும், விவசாயிகளை ஆதரித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், விவசாயம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் தூக்கிப் பிடித்தனர்.
தமிழக விவசாயிகளுக்காக எங்கள் கல்லூரியில் படிக்கும் மற்ற மாநில மாணவர்களும் ஆதரவு தந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று மாணவர்கள் பெருமையோடுத் தெரிவித்தனர்.