
தேனி
தேனியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்து பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து நகையை பறிக்க முயன்றவரை மக்கள் அடித்து வெளுத்து காவலாளர்களிடம் ஒப்படைத்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரம் குள்ளபுரம் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி மாரியம்மாள் (52). இவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது இவருடைய வீட்டுக்குள் நுழைந்த ஒருவர் வீட்டுக்கதவை பூட்டிவிட்டு தான் வைத்திருந்த கத்தியை மாரியம்மாளின் கழுத்தில் வைத்து நகைகளை கழற்றி தரும்படி மிரட்டி உள்ளார். உடனே மாரியம்மாள், ‘திருடன், திருடன்’ என்று சத்தம் போட அந்த திருடன் வீட்டில் இருந்து தெறிக்க ஓடினார்.
அப்போது, அக்கம் பக்கத்தினர் அந்த திருடனை விரட்டிச் சென்று பிடித்து அடித்து வெளுத்தனர். பின்னர், காவலாளர்களுக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் பாண்டியம்மாள் அந்த திருடனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டி காலனியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (27) என்பது தெரிய வந்தது.
எங்கெல்லாம் திருடி இருக்கிறாய்? என்று அவரிடம் தொடர்ந்து காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து நகை பறிக்க முயன்றவருக்கு, மக்கள் தர்ம அடி கொடுத்தச் சம்பவம் அந்த பகுதியில் தீயாய் பரவியது.