
திண்டுக்கல்
கொடைக்கானலில் இரண்டு மணி நேரம் விடாமல் பெய்த பலத்த மழையால் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. அடித்த சூறாவளிக் காற்றுக்கு 50 வருட பழமை வாய்ந்த மரம் முறிந்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று காலை கடும் வெப்பம் நிலவியதையடுத்து பிற்பகலில் 2 மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதில் போட் கிளப்பில் மாலை வரை 30 மி.மீட்டர் அளவில் மழை பதிவானது. இந்த மழை காரணமாக அன்னை தெரசா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம் - பழனி சாலையில் உள்ள கைராசி நகர் உள்பட மூன்று இடங்களில் மின்கம்பங்களும் ஒடிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது.
நிலக்கோட்டையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நிலக்கோட்டை - மதுரை சாலையோரத்தில் நின்றிருந்த 50 ஆண்டு பழமை வாய்ந்த ஒரு மரம் முறிந்து விழுந்தது.
இதேபோல மின்கம்பம், டிரான்ஸ்பார்மரும் ஒடிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் தடை ஏற்பட்டதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோன்று, ஒட்டன்சத்திரத்தில் இரவு 8.30 மணி அளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த காற்றில் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் அருகே இருந்த 2 டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்து விழுந்தன.
பலத்த மழை காரணமாக கொடைக்கானல் ஏரி நிரம்பி வழிகிறது. மேலும், ஏரிச்சாலையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றன. இதனால் ஏரிச்சாலை வழியாக வாகனங்கள், சைக்கிள்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பலத்த மழை காரணமாக வெள்ளிநீர் வீழ்ச்சி, பாம்பார் நீர் வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. மழையினை தொடர்ந்து கடும் குளிர் நிலவியதால் மக்கள் அனுபவித்து மகிழ்ந்தனர்.