தொடரும் சிறை கைதிகளின் தற்கொலை சம்பவங்கள் – புழல் சிறைச்சாலையில் மர்மம் என்ன….?

First Published May 30, 2017, 1:51 PM IST
Highlights
Suicide incidents of continued prison - What is the mystery in the puzhal Prison


புழல் மத்திய சிறையில் இருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறையில உள்ள கைதிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. சிறை துறை அதிகாரிகள் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த மாதம் போரூர் அருகே அதிமுக ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த தந்தை, மகன் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொது செயலாளர் வேந்தர் (எ) செந்தில்குமார் என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று காலை சிறை காவலர்கள், அனைத்து கைதிகளையும் பதிவேட்டில் இருந்தபடி விசாரித்தனர். அப்போது, செந்தில்குமார் அங்கு வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவர் அடைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அவரை அங்கு காணவில்லை.

இதையடுத்து சிறைக்காவலர்கள், சிறைச்சாலை முழுவதும் செந்தில்குமாரை தேடினர். அப்போது, சிறை வளாகத்தில் உள்ள டெலிபோன் அறையில் செந்தில்குமார், அவர் அணிந்து இருந்த லுங்கியால் தூக்குப்போட்டு சடலமாக தொங்குவதை கண்டு அதிச்சியடைந்தனர். இதை அறிந்ததும், சிறைத்துறை அதிகாரிகள் அங்கு திரண்டனர். இதனால், புழல் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

கடந்த மாதம் இளம்பெண்ணை கார் ஏற்றி கொன்றதாக இளையராஜா என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட அடுத்த நாளே அவர், அங்குள்ள கழிப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் என்ற வாலிபரும், புழல் சிறையில் அடைக்கப்பட்டபோது, மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்திலேயே பல ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் உள்ள பழல் சிறைச்சாலையில் கைதிகள் அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள சிறைத்துறை அதிகாரிகள் என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

click me!