நிலுவையில் உள்ள தொகையை கேட்டு கரும்பு விவசாயிகள் போராட்டம்; அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு...

First Published Jun 27, 2018, 12:43 PM IST
Highlights
Sugarcane farmers struggle for asking balance amount of sugarcanes...


விழுப்புரம்

நிலுவையில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய தொகையை கேட்டு சர்க்கரை ஆலை அலுவலகத்தை கையில் கரும்புடன் முற்றுகையிட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த செம்மேடு கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையின் அரவை பருவத்திற்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு அதற்கான தொகை கடந்த ஐந்து மாதங்களாகியும் வழங்கப்படவில்லை. 

இதனால் ஆலை அதிகாரிகளிடம் இது தொடர்பாக கரும்பு விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதற்கு ஆலை நிர்வாகம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 

இந்த நிலையில், கரும்பு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று நேற்று விவசாயிகள் அனைவரும் கையில் கரும்புடன் சர்க்கரை ஆலை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பேரணியாக சென்றனர்.

இந்த பேரனிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி தலைமைத் தாங்கினார். போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பாக அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து, தீர்வு காண்பது என்று விவசாயிகள் முடிவு எடுத்தனர். அதன்படி, ஆலையின் துணை பொது மேலாளர் வரதராஜை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். 

மனுவை பெற்றுக்கொண்ட அவர், "விரைவில் நிலுவை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

ஆனால், அதிகாரியின் பதிலை ஏற்க மறுத்த விவசாயிகள், "தங்களுக்கு அடுத்த 15 நாட்களுக்குள் நிலுவை தொகை வழங்கப்படும்" என்று கைப்பட எழுதி தரவேண்டும் என்று வலியுறுத்தினர். 

ஆனால், இதனை அதிகாரி ஏற்க மறுத்துவிட்டார். இதனால் அலுவலகத்தில் இருந்து வெளியேறிய விவசாயிகள், ஆலையை முற்றுகையிட்டு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

இதனைத் தொடர்ந்து, "விவசாயிகளுக்கு சேரவேண்டிய நிலுவை தொகைக்கு உரிய முடிவு வரும் வரையில் போராட்டம் தொடரும்" என்று அறிவித்த விவசாயிகள், அலுவலகத்தின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

மாலை 5 மணிக்கு விவசாயிகளிடம் ஆலை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஜூன் மாதம் 25-ஆம் தேதிக்குள் நிலுவை தொகை வழங்குவதாக எழுத்து பூர்வமாக ஆலை அதிகாரிகள் எழுதி கொடுத்தனர். இதனையேற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குண்டுரெட்டியார், செயலாளர் தமிழரசன், பொருளாளர் வரதராஜன், நிர்வாகிகள் மாதவன், சின்னப்பா, முருகன், ஜோதிராமன், துரைராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். 
 

click me!