குறைகேட்பு கூட்டத்தில் சர்க்கரை ஆலை அதிகாரியை கேள்விகளால் துளைத்த விவசாயிகள்; கூட்டம் பாதியிலேயே முடிந்தது...

Asianet News Tamil  
Published : Jan 20, 2018, 08:31 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
குறைகேட்பு கூட்டத்தில் சர்க்கரை ஆலை அதிகாரியை கேள்விகளால் துளைத்த விவசாயிகள்; கூட்டம் பாதியிலேயே முடிந்தது...

சுருக்கம்

Sugar mill workers questioned by the sugar mill staffer at a meeting The meeting ended halfway ...

கடலூர்

கடலூரில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் சர்க்கரை ஆலை அதிகாரியை கரும்பு விவசாயிகள்  கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிகாரிகள் திணறி பரபரப்பு நிலவியதால் கூட்டம் பாதியிலேயே முடித்து வைக்கப்பட்டது.

கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமைத் தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், ஆட்சியரிடம் தங்களது குறைகளைத் தெரிவித்தனர். அதன் விவரம் பின்வருமாறு:

"உளுந்து பயிரை காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பம்பர் பரிசு போல் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை இழப்பீடு தொகை கிடைத்துள்ளது. இதற்காக உதவி வேளாண்மை அலுவலர் விஜயராகவனுக்கும், ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு பிறகு கல்லணையில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட கடலூர் மாவட்டத்திற்கு வரவில்லை. கடலூர் மாவட்டத்தை கல்லணை வஞ்சிக்கிறது. டெல்டா பகுதிகளில் கடைமடைக்கு மார்ச் மாதம் வரை தண்ணீர் தருவதை உறுதிசெய்ய வேண்டும்.

வேளாண்மை துறையினர், எம்.ஜி.ஆர். 100 என்ற புதிய ரக நெல்லை அறிமுகப்படுத்தி உள்ளனர். அந்த நெல்லை சாகுபடி செய்தேன், நல்ல விளைச்சல் தந்துள்ளது, பூச்சித் தாக்குதலும் இல்லை" என்று மகிழ்ச்சியைத் தெரிவித்த விவசாயிகள், "மங்களூர் வட்டாரத்தில் மக்காச்சோளம், பருத்தி பயிர்களை காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு எப்போது கிடைக்கும்? என்று கேட்டனர்.

அதற்கு அதிகாரிகள், "கூட்டுறவுகடன் சங்கத்தில் கடன்வாங்கிய விவசாயிகள் 1,152 பேருக்கு 3 கோடி ரூபாய் வந்து உள்ளது, கடன் பெறாத விவசாயிகளுக்கும் விரைவில் 8 கோடி ரூபாய் வர உள்ளது" என்று தெரிவித்தனர்.

பின்னர், மீண்டும் விவசாயிகள், "மங்களூரில் மக்காச்சோளத்துக்கு நேரடி கொள்முதல் நிலையம் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றும் நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு நிலுவைத்தொகையாக டன்னுக்கு 1,325 ரூபாய் தர வேண்டும். ஆனால் அவர்களுக்கு வேண்டப்பட்ட சங்கங்களை அழைத்து பேசி, டன்னுக்கு 385 ரூபாய் கொடுப்பதாக முடிவு பண்ணி உள்ளது. இதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்றும் கேள்வி கேட்டனர்.

அதற்கு ஈ.ஐ.டி.பாரி அதிகாரி, "கடந்த 4 ஆண்டுகளில் சர்க்கரை விலை வீழ்ச்சி காரணமாக மாநில அரசு பரிந்துரை விலையை கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க முடியவில்லை. இது தொடர்பாக அரசுடன் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் ஆலை நிர்வாகங்களே கரும்பு விவசாயிகளை அழைத்து பேசி தீர்வு காணலாம் என முடிவு ஏற்பட்டது.

அதனடிப்படையில் ஆலை நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்து பேசியதில், நிலுவைத்தொகையாக டன்னுக்கு 385 ரூபாய் தருவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போடும் விவசாயிகளுக்கு மட்டும் பணத்தை வழங்குகிறோம்" என்று உடனே தெரிவித்தார்.

அவரது பேச்சுக்கு மாதவன் மற்றும் கரும்பு விவசாயிகள் எழுந்து நின்று கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். உடனே ஆட்சியர் தலையிட்டு, "இந்த பிரச்சனைக்கு நாம் இங்கே முடிவு பண்ண முடியாது, எனவே வேறு பிரச்சனை பற்றி பேசுங்கள்" என்றார்.

"புதுச்சேரி அரியூர் சர்க்கரை ஆலை கரும்பை வாங்கி அரைக்கிறார்கள். இதற்கு அனுமதி வாங்கியிருக்கிறார்களா? என்ற கேள்விக்கு  ஈ.ஐ.டி. பாரி அதிகாரி, "கரும்பு ஆணையரிடம் அனுமதி பெற்றுள்ளோம்" என்று தெரிவித்தார்.

"ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாத விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்குவீர்களா?" என்று கேட்டதற்கு ஈ.ஐ.டி. பாரி அதிகாரி, "ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாத விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க முடியாது, ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் விவசாயிகளுக்கு  மட்டும் தான் நிலுவைத்தொகை வழங்கப்படும். இதுவரை 11 ஆயிரம் விவசாயிகள் கையெழுத்து போட்டுள்ளனர்" என்றார்.

உடனே ஆட்சியர் மீண்டும் குறுக்கிட்டு, இந்த பிரச்சனையை இந்த மன்றத்தில் பேச வேண்டாம், இங்கே பேசினால் தீர்வு காணலாம் என நினைத்தால், நீங்களே ஈ.ஐ.டி.பாரி அதிகாரியிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அமைதியாக இருந்தார்.

இதற்கிடையே கரும்பு விவசாயிகள் ஒருசேர எழுந்து நின்று ஈ.ஐ.டி.பாரி அதிகாரியிடம் கேள்விமேல், கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டம் பரபரப்பானது. அதனால், கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

சில்லுகளைப் பொறுக்கி எடுத்து கட்சி நடத்தும் விஜய் Uncle..! எங்களுக்கு சவால் விடலாமா? அதிமுக அட்டாக்..!
ஒரே நாளில் மாஸ் காட்டிய முதல்வர்! காலையில் ரூ.5000 அறிவிப்பு! அதுக்கு அப்புறம் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்