
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 1.62 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறிதது சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னையை சேர்ந்த கணேஷ்குமார் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் மத்திய குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக இருந்த நாகஜோதி மேற்கொண்டு வந்தார்.
உச்சநீதிமன்றம் கண்டிப்பு
இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். இதனையடுத்து மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை முடிவடைந்ததையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது 6 மாத கால அவகாசத்தை மத்திய குற்றப்பிரிவு கேட்டனர். அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், 6 மாத கால அவகாசம் கொடுக்க முடியாது என தெரிவித்தனர். மேலும் குறைந்தபட்ச கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும் என கூறினர். அதற்கு நடைமுறை சிக்கல் இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
டிஜிபி ஆஜராக உத்தரவிடுவோம்
உங்களுக்குப் பிரச்னைகள் என்பது எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். நீங்கள் நினைத்தால் 24 மணி நேரத்தில் வேலையை முடிப்பீர்கள். 24 வருடமானாலும் வேலையை முடிக்காமல் இழுத்தடிப்பீர்கள். அரசுகள் எப்படிச் செயல்படும் என்பது தெரியும் என நீதிபதிகள் காட்டமாக கூறினர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்புகிறோம். எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை அவர்களே இந்த விஷயத்தில் நேரில் வந்து கேட்கட்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
நாகஜோதி இடமாற்றம்
இந்த சூழலில் செந்தில் பாலாஜி வழக்கில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை அதிகாரியாக இருந்து வந்த நாகஜோதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாகஜோதிக்கு பதிலாக புதிய துணை ஆணையராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். நாகஜோதி தற்போது ஆவணக் காப்பக எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.