
புறநகர் ரயில்களின் முக்கியத்துவம்
சென்னையில் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர் மார்க்கெட்-திருவள்ளூர்-அரக்கோணம், மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மற்றும் கடற்கரைவேளச்சேரி ஆகிய இடங்களுக்கு புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சென்னையில் மெட்ரோ ரயில்கள் இருந்தாலும், மிகவும் குறைவான கட்டணத்தில் சரியான நேரத்தில் மக்களை கொன்டு சேர்ப்பதில் புறநகர் ரயில்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
சென்னை புறநகர் ரயில் சேவை வழித்தடத்தில் எப்போதும் பிஸியாக இருப்பது கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடம் ஆகும். செங்கல்பட்டு, தாம்பரம் சுற்றுவட்டார புறநகர் பகுதிகளில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு வேலைக்கும், பள்ளி, கல்லுரிகளுக்கும் வருகின்றனர். இந்த வழித்தடத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் முன்பு ஏசி ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், கொரோனா காலத்தில் அது நிறுத்தப்பட்டது.
மீண்டும் ஓடப்போகும் ஏசி ரயில்கள்
சென்னையில் மீண்டும் ஏசி புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் மீண்டும் மார்ச் மாதம் முதல் புறநகர் ஏசி ரயில்கள் இயக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ''மார்ச் முதல் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரத்தில் இருந்து ஏசி ரயில் அறிமுகப்படுத்தப்படலாம்'' என்று சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் பி. விஸ்வநாத் ஈர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் 12 பெட்டிகளை கொண்ட ஏசி ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ஏசி ரயில்களின் சோதனை ஓட்டம் பிப்ரவரி இரண்டாவது வாரம் நடைபெற உள்ளது. இந்த சோதனை ஓட்டம் முடிந்த பிறகு சென்னை பீச் தாம்பரம் வழித்தடத்தில் ஏசி ரயில்கள் இயக்கபடும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டணம் என்ன?
ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்ட 12 ரேக்குகள் கொண்ட ஏசி ரயிலில் ஒரு ட்ருப்புக்கு சுமார் 5,700 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். 1,320 பேர் இருக்கைகளில் அமர முடியும். ''இந்த ஏசி ரயிலக்ள் விரைவில் சென்னை கோட்டத்திடம் ஒப்படைக்கப்படும். 12 பெட்டிகளைக் கொண்ட இந்த ரேக், வழக்கமான ரேக்குகளுடன் ஒப்பிடும்போது கூடுதல் சுமந்து செல்லும் திறனை வழங்கும் வகையில், குறைந்த சுமை மோட்டார்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்று ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை புறநகர் ஏசி ரயில்களுக்கான கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தற்போதுள்ள கட்டண அமைப்பின்படி, ஏசி புறநகர் ரயிலுக்கான டிக்கெட் விலை, முதல் வகுப்பு ஏசி அல்லாத உள்ளூர் ரயில் டிக்கெட்டை விட 1.3 மடங்கு அல்லது 2 மடங்கு அதிகமாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த ரயில்கள் குறித்த அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது. புறநகர் ரயில் பயணிகள் வெயிலை சமாளிக்க ஏசி ரயில்கள் சூப்பர் தீர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.