
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், பல்வேறு கருத்துகள் அரசியல் தலைவர்களால் எழுப்பப்பட்டு வருகின்றன.
பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த், 420 மோசடி பேர்வழி என்றும், காமராஜரின் படிப்பறிவின்மையையோடு ரஜினிகாந்த்தை ஒப்பிட முடியாது என்றும், காமராஜர் அரசியல் தொண்டராக இருந்து முதலமைச்சராக உயர்ந்தவர் என்றும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதேபோல் பாஜகவின் தேசிய தலைவர் ஹெச். ராஜா, நேற்று பேசுகையில், தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினி காந்த் தேவையில்லை என்றும் அந்த இடத்தை நிரப்புவேன் என்றும் கருத்து கூறியிருந்தார்.
அதேபோல் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், நடிகர் ரஜினி காந்த்-ன் கனவு நிறைவேறும் வகையில், அவர் தலைமையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார். அரசியலுக்கு ரஜினி வருவது குறித்து பல்வேறு தலைவர்கள் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமி, தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அரசியலுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வந்தால் அவருக்குத்தான் ஆபத்து என்று கூறினார்.
பான், குட்கா விவகாரம் குறித்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், பான், குட்கா விவகாரத்தில் வழக்கு இருப்பதால் தீர்ப்பு வந்த பிறகு பார்க்கலாம் என்றார்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் புலியாக இருந்தாலும், டெல்லிக்குச் சென்றால் பூனைக்குட்டிதான் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.