
தேனி
தேனி மாவட்டத்தில் நேற்று மாலை முதலே 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது.
“அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு உடனே நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்,
சேமிப்புத் தொகையை தேவைக்கேற்ப வழங்குவது” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 15-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும் என்று அனைத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதனை அறிவித்து ஒரு மாதத்திற்கும் மேலானது.
அப்போதில் இருந்து அரசு ஐந்து கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது. அரசு காட்டிய மெத்தனத்தால் வேலைநிறுத்தம் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் வேலைநிறுத்தத்தை தேனி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி முதலே போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தொடங்கினர்.
தேனி, போடி, தேவாரம், பெரியகுளம், கம்பம், குமுளி ஆகிய இடங்களில் உள்ள போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.
பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் நேற்று மாலை முதலே கடும் அவதிக்குள்ளாக ஆரம்பித்துவிட்டனர்.