
சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், 2 இலட்சத்து 24 ஆயிரத்து 640 மாணவ மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
இந்தியாவில் கழிப்பறையின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் 47 சதவித மக்கள் கழிப்பறையைப் பயன்படுத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 57 சதவிதமாக உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கழிப்பறையின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவிதகழிப்பறை பயன்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
தூய்மை பாரதத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், பள்ளி கல்வித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து 100 சதவித கழிப்பறை பயன்பாட்டின் இலக்கை மார்ச் மாதத்தைக் கொண்டுள்ளனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் என அனைத்து பள்ளிகளிலும் பயிலும் பள்ளி 2 இலட்சத்து 24 ஆயிரத்து 640 மாணவ, மாணவிகளுக்கு தனிபட்ட முறையில் ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் “நான் உன்னுடன் உனக்குத் தெரியாத ஒரு கருத்தை பகிந்து கொள்ள விரும்புவதாக எனத் தொடங்குகிறது. நமது நாடு சுதந்திரம் பெற பாடுபட்ட மகாத்மா காந்தி சுதந்திரத்தைவிடவும் பெரிதான ஒன்றை அவர் கருதினார் என்பதை உனக்கு சொன்னால் நீ ஆச்சரிப்படுவாய்! ஆம், சுகாதாரத்தைத்தான் அவர் சுதந்திரத்தைவிட மேலானதாகப் போற்றினார். தெய்வபக்திக்கு அடுத்த நிலையில் சுகாதாரத்தை வைத்து அவர் போற்றினார்.
நமது வீட்டின் வரவேற்பு அறை எவ்வளவு சுத்தமானதோ, அதேபோல கழிப்பறையும் சுத்தமானதாக இருக்க வேண்டும் என கருதிய அவர், சுத்தமும், சுகாதாரமும் உள்ள கிராமமே தனது இலட்சியமான கிராமம் என்றார்.
பெற்றோரிடம் கூறி, அரசு அளிக்கும் மானியத்தை பெற்று கழிப்பறை கட்ட மாணவர்கள் முயற்சிக்க வேண்டும்.
இக் கடிதத்தை உனது ஆசிரியர் முன்னிலையில் வாசித்து உறுதிமொழி ஏற்று, அதை பின்பற்றுவேன் என கையெழுத்திட வேண்டும்.
ஆலோசனைகளை அனுப்பி வைக்கலாம் எனவும், அதற்கு பரிசு வழங்கப்படும் எனவும் ஆட்சியர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.