
ஈரோடு
ஐந்தாவது நாளாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவ, மாணவிகள் மாட்டு வண்டிகளில் பள்ளிக் கூடங்களுகு சென்றனர்.
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான அரசு பேருந்த்கள் ஓடவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் மிக குறைந்தளவே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவ – மாணவிகள் வழக்கம்போல் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு புறப்பட்டனர்.
ஆனால், ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் அரசு, தனியார் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. சில பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றனர்.
கிராமப் புறங்களில் இருந்து பள்ளிக் கூடங்களுக்கு செல்லும் மாணவ – மாணவிகள் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். பல இடங்களில் அவர்கள் நடந்தே பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் பேருந்துகள் ஓடாததால் மாணவ – மாணவிகள் சிலர் மாட்டு வண்டிகளில் பள்ளிக்கூடத்திற்குச் சென்றனர்.
இதேபோல பெற்றோர்கள், உறவினர்கள் மாணவ – மாணவிகளை பள்ளிக்கூடங்களுக்கு இருசக்கர வாகனங்களில் காலையில் கொண்டு சென்றுவிட்டு, மாலையில் அழைத்து வந்தனர்.
குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டதால் ஈரோடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆங்காங்கே பயணிகள் பேருந்துகளுக்காக காத்திருந்தனர்.