அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து மாணவர்கள் போராட்டம்; விரைந்து வந்த போலீஸ் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை...

 
Published : Jul 13, 2018, 11:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து மாணவர்கள் போராட்டம்; விரைந்து வந்த போலீஸ் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை...

சுருக்கம்

Students captured government buses and protest

திருப்பூர்

திருப்பூரில் அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கல்லூரிகளில் திருப்பூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ - மாணவிகள் படிக்கின்றனர். இவர்களில் ஏராளாமானோர் தங்களது பயணத்துக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளைதான் நம்பி உள்ளனர். 

மேலும், கோயம்புத்தூரில் உள்ள அலுவலக பணியாளர்களும் கூட அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தான் பயணிக்கின்றனர். 

இதில், திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருமுருகன்பூண்டி, அவினாசி, தெக்கலூர், கருமத்தம்பட்டி வழியாக கோயம்புத்தூருக்கு செல்லும் வழித்தடம் தேசிய நெடுஞ்சாலையாக இருக்கிறது.

இதனால் இந்த வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளின் பயண நேரம் குறைவாக இருப்பதால் பெரும்பாலான மாணவ - மாணவிகள், ஊழியர்கள் என அனைவரும் இந்த வழித்தடத்தையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். 

இதனால் இந்த வழித்தடத்தில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை கோயம்புத்தூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.

போன வாரம் தமிழகம் முழுவதும் இடைநில்லா பேருந்துகள் மற்றும் சொகுசு பேருந்துகள் சேவையை அரசு தொடங்கியது. 

இதனைத் தொடர்ந்து காலை 6.20 மணி முதல் 8 மணி வரை அவினாசி வழியாக கோயம்புத்தூருக்கு செல்லும் சுமார் 13 அரசு பேருந்துகளில் புதிதாக 4 பேருந்துகள் இடைநில்லா பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகிறது. 

இடையில் எங்கும் நிற்காமல் சென்றுவருவதால் அந்த நான்கு பேருந்துகளிலும் வழக்கமாக சென்றவர்கள் அதற்கு பதிலாக வேறு பேருந்துகளை பயன்படுத்திவந்தனர்.  ஆனால், அந்த பேருந்துகளில் அதிகளவில் கூட்ட நெரிசல் இருப்பதால் சில நிறுத்தங்களில் அரசு பேருந்துகள் நிற்காமல் சென்றுவிடுகின்றன. 

இதனால் மாணவ - மாணவிகள் சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.  இந்த நிலையில் திருமுருகன்பூண்டி பேருந்து நிறுத்தத்தில் நேற்று காலை வழக்கம்போல அப்பகுதியை சேர்ந்த ஏராளமான கல்லூரி மாணவ - மாணவிகள் காத்திருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த பேருந்துகளில் ஏற்கனவே பயணிகள் கூட்டம் அதிகமாகவும், அவர்கள் முன்பக்கம் மற்றும் பின்பக்க படிக்கட்டுகளில் தொங்கியபடியும் பயணம் மேற்கொண்டனர்

இதனால் பேருந்துகள் திருமுருகன்பூண்டி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுவிட்டன. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள், திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு ஒன்றன்பின் ஒன்றாக சென்ற மூன்று இடைநில்லா பேருந்துகளும் திருமுருகன்பூண்டி வந்தபோது, அவற்றை மறித்து சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "காலை நேரத்தில் செல்லும் பேருந்துகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் திருமுருகன் பூண்டியில் நிற்பதில்லை. எனவே, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்" என்று கூறினர். 

அதற்கு, "உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி தாருங்கள். தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம்" என்று காவலாளர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்துக்கு சென்று ஆய்வாளர் வேலுவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். 

இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

டிடிவி, ஓபிஎஸ் உடன் கூட்டணி பேச்சு., அதிமுகவில் இருந்து பலரும் தவெக வருவார்கள்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
Tamil News Live today 25 December 2025: வெற்றிமாறனின் சிஷ்யன் இயக்கிய படம்... சிறை சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ