
மதுரை
எங்களின் நான்கு அம்ச கோரிக்கைகளை குறித்து தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தரவில்லை என்றால் பிப்ரவரி 21-ஆம் தேதி சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது உறுதி என்று ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கூட்டம் நேற்று மதுரையில் நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் பேசியது:
"ஆசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர்களின் நான்கு அம்ச கோரிக்கைகளைஉடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
ஊதிய உயர்வு முரண்பாட்டை களைய வேண்டும்.
பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
21 மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்" மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து உடனடியாக தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அவற்றை நிறைவேற்றி தரவில்லை என்றால் பிப்ரவரி 21-ஆம் தேதி எழிலகம் முதல் தலைமைச் செயலகம் வரை பேரணியாக சென்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுவது உறுதி" என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் சேடபட்டி ஒன்றிய தலைவர் சந்திரசேகர், செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் பொற்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.