
புதுக்கோட்டை
ஐட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயு எடுக்கும்போது அதிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளை தெர்மகோல் போட்டு மூடும் போராட்டத்தை நெடுவாசல் மக்கள் 76-வது நாளான நேற்று நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஐட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வலுவாக வலியுறுத்தி நெடுவாசல் மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி தங்களது இரண்டவது கட்டப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்த திட்டத்தை அமல்படுத்திய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 76-வது நாளாக தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர் நெடுவாசல் போராளிகள்.
இந்தப் போராட்டத்தில், ஐட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், போராடி வரும் மக்களை கண்டுக் கொள்ளாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து ஐட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயு எடுக்கும்போது, அதில் இருந்து வெளியேறும் கழிவுகளை தெர்மகோல் போட்டு மூடுவதுபோல சித்தரித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியது:
“பல மாதங்களாக போராடி வரும் எங்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுக் கொள்ளவில்லை. நெடுவாசலில் ஐட்ரோகார்பன் எடுத்தால், அதிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளால் பெரும் சுகாதாரகேடு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும்.
இதை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்தும் விதமாக, ஐட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயு எடுக்கும்போது அதிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளை தெர்மகோல் போட்டு மூடும் போராட்டத்தை நடத்தினோம்.
திட்டத்தை ரத்து செய்யும் வரை நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். அதனால், திட்டத்தை உடனே ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.