
விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதையடுத்து தேனி புதிய பேருந்து நிலைய வளாகம் வந்த இளைஞர்களை அங்கு குவிக்கப்பட்டு இருந்த காவலாளர்கள் திருப்பி அனுப்பினர்.
தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக டெல்லியில் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஐட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஒப்பந்தத்திலும் மத்திய அரசு கையெழுத்திட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறான செயலை செய்துள்ளது. இந்த செயல் தமிழகத்தை வஞ்சிக்கும் விரோதப்போக்கு என விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால், சல்லிக்கட்டு போராட்டத்திற்கு கூடியது போல தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தில் இறங்க போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி அரசிற்கு கிலியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியதையடுத்து தேனி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று காலை காவலாளர்கள் குவிக்கப்பட்டனர். காலை 6 மணிக்கே காவலாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.
பேருந்து நிலைய வளாகம் முழுவதும் காவலாளர்கள் சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக சென்ற இளைஞர்களை பிடித்து விசாரணையும் நடத்தினர்.
இதனிடையே காலை 9 மணியளவில் சில இளைஞர்கள் அந்த வழியாக வந்தனர். அவர்கள் இணையதளத்தில் பார்த்து போராட்டத்தில் பங்கேற்க வந்ததாக தெரிவித்தனர். அவர்களை காவலாளர்கள், “அந்த மாதிரி எந்த போராட்டமும் இங்க நடக்கல, வீட்டுக்குப் போங்க” என்று எச்சரித்து அனுப்பினர்.
அதனைத் தொடர்ந்து அங்கு காவல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.