
பெரம்பலூர்
மத்திய அரசின் கொண்டுவந்த ஜி.எஸ்.டியால் வாடிக்கையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதால் அதனைக் கண்டித்து வருகிற 30-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட உணவு விடுதிகள், அடுமனைகள், தேநீர் கடைகள் மூடப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில், உணவு விடுதிகள், இனிப்பகங்கள், அடுமனைகள், தேநீர் கடைகள், தங்கும் விடுதிகள், உணவகம் ஆகியவை இணைந்த தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் வசந்தம் ரவி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட கௌரவத் தலைவர் அஸ்வின்ஸ் கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார்.
மாவட்டச் செயலாளர் உடையார் முத்துக்குமார், செயலாளர் குரு சிவக்குமார், நகரத் தலைவர் ஊட்டி செல்லபிள்ளை, கல்யாணி சுந்தரம், தம்பு பாலாஜி, சாந்தி செல்வராஜ், கொங்குசிவா மற்றும் உரிமையாளர்கள், உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், “மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி மசோதா மூலம், குளிர்சாதன வசதி இல்லாத உணவு விடுதிகளுக்கு 10 சதவீதமும், குளிர்சாதன வசதி கொண்ட உணவு விடுதிகளுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்பட உள்ளது.
இதனால் உணவு விடுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டத் தொகையுடன் சேர்த்து வரிக்கான கூடுதல் தொகையையும் செலுத்த வேண்டும்.
இது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். வணிகர்களும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று வருகிற 30-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உணவு விடுதிகள், அடுமனைகள் மூடப்படுகின்றன.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட உணவு விடுதிகள் மற்றும் அடுமனைகள், தேநீர்க் கடைகள் மூடப்படும்” என்று முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.