
டிஜிபி பதவி போட்டியில் முதலிடத்தில் அர்ச்சனா ராமசுந்தரமும், கே.பி. மகேந்திரனும் உள்ளனர். இதில், யார் டிஜிபியாக வருவார்கள் என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவு வருகிறது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவர் தீர்மானிக்கும் காவல் அதிகாரிகள், டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர். டிஜிபியாக வர வாய்ப்பே இல்லாதபோதிலும், உளவுதுறையில் புலி என பெயர் எடுத்த ராமானுஜத்தை உளவு துறை டிஜிபியாக்கி சட்டம் ஒழுங்கை கூடுதலாக பார்க்க வைத்தார்.
அதேபோன்று, நேர்மையான போலீஸ் அதிகாரியான அசோக் குமாரை, டிஜிபி ஆக்கி அழகு பார்த்தார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு குணம் உண்டு. திமுகவுடன் நெருக்கமாக உள்ள காவல் அதிகாரிகளை எந்த காலத்திலும் தள்ளி வைத்துத்தான் பார்ப்பார்.
அந்த வகையில், திமுக ஆதரவு அதிகாரிகள் என பட்டியலிடப்பட்ட ஜாபர்சேட், ஜாங்கித், ராதாகிருஷ்ணன், காந்திராஜன், சேகர் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டனர்.
கருணாநிதி குடும்பத்தில் சம்மந்தம் வைத்த காரணத்தால் ஓரங்கட்டப்பட்ட அதிகாரிகளும் உண்டு. ராஜாத்தி அம்மாளுடன் பழக்கம் என்ற காரணத்தால், கடைசி வரை கமிஷனர் வாய்ப்பு கிடைக்காமலேயே போன அதிகாரி இன்றும் பணியில் இருக்கின்றார்.
சில அதிகாரிகள் தூக்கி அடிக்கப்பட்டு ஒன்றுமில்லாத இடத்துக்கு சென்றனர். சிலர், பணி கொடுக்கப்பாடமலே ஓரங்கட்டப்பட்டனர். அந்த வகையில், புதிய தலைமை செயலகம் கட்டும் பணியில் முதல்வர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்த அப்போதைய ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமசுந்தரம், பின்னாளில் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டார்.
ஜெயலலிதாவை எதிர்க்க முடியாமல் விருப்ப ஓய்வு பெற்று சென்றார். அவருடைய மனைவி அர்ச்சனா ராமசுந்தரம். சிபிசிஐடி உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் டெல்லிக்கு அயல் பணிக்கு சென்றார். அப்போது, தமிழக அரசுடன் ஏற்பட்ட மோதலில் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
பின்னர், தீர்ப்பாயத்துக்குச் சென்று கடும் முயற்சிக்குப் பிறகு, மீண்டும் பணியைப் பெற்றார். தமிழக அரசுடன் மோதுவது, முதல்வர் ஜெயலலிதாவுடன் நேருக்குநேர் மோதுவதற்கு சமானம் என்ற அடிப்படையில், அர்ச்சனா ராமசுந்தரம், தனது பணி ஓய்வு வரை தமிழகத்துக்குள்ளேயே வர முடியாத அளவுக்கு தமது பணியை மாற்றிக் கொண்டார்.
ஆனால், அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்வுகள் தமிழக அரசியலை புரட்டிப் போட்டது. ஜெயலலிதா மறைவை அடுத்து புதிதாக அமைந்த எடப்பாடி அரசு, காவல் துறையில் பல மாறுதல்களை செய்தது.
ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டு கடைகோடி தமிழகத்தில் பணியில் இருந்த பல அதிகாரிகள், சென்னைக்குள் ட்ரேன்ஸ்வர் செய்யப்பட்டனர். திமுக ஆதரவு அதிகாரிகள் என பெயரெடுத்த பலரும் ஓரளவு ரிலாக்ஸ் ஆக நல்ல பதவியில் அமர்த்தப்பட்டு தங்கள் பணியை செய்து வருகின்றனர்.
ஜெயலலிதா இருந்திருந்தால், இவரால் வர முடியுமா? என்ற நிலையில் இருந்த பல அதிகாரிகளும், நல்ல பதவிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்து, ஜெயலலிதா எதிர்ப்பாளராகவே தன்னைக் காட்டிக் கொண்ட அர்ச்சனா ராமசுந்தரம், அக்டோபர் மாதம் ஓய்வு பெறும் நிலையில் டிஜிபி போட்டியில் இருக்கிறார்.
அடுத்தடுத்த இடத்தில் இருக்கும் கே.பி. மகேந்திரன், எந்த பிரச்சனையிலும் சிக்காத அதிகாரி என்று பெயர் எடுத்தவர். இது பற்றி கருத்து தெரிவித்த அதிமுக நிர்வாகி ஒருவர் அம்மா இருந்தவரை, அந்த பெண் அதிகாரியை கிட்டே நெருங்கவிடவில்லை. இப்ப அம்மாவே இல்லை. நடப்பது அம்மாவின் ஆட்சி என்றால், அந்த பெண் அதிகாரியை டிஜிபியாக ஆக்கக் கூடாது. அவர் தவிர யார் வந்தாலும் சரிதான். அவரைக் கொண்டு வந்தால், அது அம்மாவுடைய எண்ணத்துக்கு மாற்றாக இந்த அரசு நடக்கிறது என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா இருந்திருந்தால் அவரால் ஓரம் கட்டப்பட்ட அர்ச்சனா கண்டிப்பாக டிஜிபியாக வர முடியாது. எடப்பாடி என்ன செய்கிறார்... பார்ப்போம்...?