
தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் விளம்பரத்துக்காக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு 100 பேரி கார்டுகளை வழங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, பொதுமக்களின் கடும் எதிர்ப்பால், இழுத்து மூடப்பட்டது. இதுதொடர்பான போராட்டத்தில், 13 பேரை போலீசார், துப்பாக்கி சூடு நடத்தி கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், ஆலையை திறக்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் இந்த எதிர்ப்பை சமாளிக்கும் வகையில், ஆறுமுகநேரியை சேர்ந்த ஒப்பந்ததாரர் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதி மக்களை சந்தித்து அவர்களை சமாதானப்படுத்துவதற்காக அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு லட்சகணக்கில் நிதி அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையாட்டி தமிழக அரசின் இந்துசமய அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்செந்தூர் சுப்பிமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவிற்கு வரும் பக்தர்களை வரவேற்று வைக்கப்பட்டிருந்த ஸ்டெர்லைட் பேனர்கள் கிழிக்கப்பட்டன.
இந்நிலையில், கோயில் பயன்பாட்டுக்காக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பெயர் கொண்ட 100 இரும்பு பேரி கார்டுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. அதில் கந்தசஷ்டி கவசத்தில் இடம் பெற்றுள்ள வாசகம் சிறிய அளவில் எழுதப்பட்டு ஸ்டெர்லைட் காப்பர் இறைபணியில் இறங்கி இருப்பதாக அறிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் விதிகளை கடைப் பிடிக்கவில்லை என, அரசால் இழுத்து மூடப்பட்ட ஒரு நிறுவனத்தின் பெயரில் எப்படி இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் பேரி கார்டுகளை பெறுகின்றனர் ? என பொதுமக்கள், அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசு வாதாடி வரும் நிலையில் பேரிகார்டுகளில் இருந்து ஸ்டெர்லைட்டின் விளம்பரங்களை நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதே நேரத்தில் கோயிலில் கூட்டத்தை கட்டுப்படுத்தவே பேரிகார்டுகளை உபயமாக பெற்றதாகவும், இதில் எந்த விளம்பர நோக்கமும் இல்லை என்றும் அறநிலையதுறையினர் கூறுகின்றனர்.