
திண்டுக்கல்
திண்டுக்கல் இரயில் நிலையத்தில் செயல்படாமல் இருக்கும் வாகன காப்பகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரயிலே காவலரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு உள்ளது. இதுவரை ஆறு பைக்குகள் திருடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு நாள்தோறும் 84 இரயில்கள் வந்து செல்கின்றன. தற்போது பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் ஏராளமான மக்கள் இரயில்களிலேயே பயணம் மேற்கொள்கின்றனர்.
தேனி மாவட்ட பயணிகள் பெரும்பாலானோர் திண்டுக்கல்லுக்கு வந்து அங்கிருந்து இரயில்களில் சென்று வருகின்றனர். இதேபோல திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள், தங்களது இருசக்கர வாகனங்களை திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு இரயில்களில் சென்று வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வாகன காப்பகம் செயல்பட்டு வந்தது. இதற்கிடையே வாகன காப்பகம் நடத்துவதற்கான ஏலத் தொகையை இரயில்வே நிர்வாகம் பலமடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், யாரும் ஏலம் எடுக்காததால் திண்டுக்கல் இரயில் நிலையத்தில் உள்ள வாகன காப்பகம் திறந்தே கிடக்கிறது. இங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பிவந்து பார்த்தால் வாகனம் இருக்குமா? என்ற சந்தேகம் பயணிகள் மத்தியில் ஊடுறுவுகிறது.
திண்டுக்கல் இரயில் நிலைய வளாகத்தில் உள்ள வாகன காப்பகம் நகர் வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்டது. இங்கு கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஆறு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளது என்று புகார்கள் வந்துள்ளன. இதில் ஒரு மோட்டார் சைக்கிள் இரயில்வே காவலருடையது ஆகும்.
எனவே, இரயில்வே நிர்வாகம் ஏலத் தொகையை குறைத்து வாகன காப்பகத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாகனங்கள் பல நாட்கள் நிறுத்தப்படுவதால் மழை, வெயிலில் பாதிக்கப்படுவதை தடுக்க மேற்கூரை அமைக்க வேண்டும்" என்பது மக்கள் மற்றும் வாகன காப்பகம் நடத்துவோரின் கோரிக்கையாக இருக்கிறது.