தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

First Published Nov 12, 2016, 11:55 PM IST
Highlights


தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

நெல்லையில் இன்று காலை மார்க்சிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநில மாநாடு தொடங்குகிறது. கட்சி கொடியை டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஏற்றி வைக்கிறார். அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மாவட்ட பிரநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. நிறைவு நாளான 14ம் தேதி மாலை அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்கரத் நிறைவுரை ஆற்றுகிறார்.

மாநாட்டில் தமிழகத்தில் கட்சி வலுப்பெறுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது. கட்சியில் புதிதாக இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இன்றுமாலை நவம்பர் புரட்சி தினத்தையொட்டி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் கருத்தரங்கம் நடக்கிறது. மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்குகிறார். அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசுகிறார்.

அப்போது, மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது, பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது. இது பற்றி சிறுபான்மை பிரதிநிதிகள் உள்பட அனைத்து தரப்பினர் இடையே கருத்துகளை கேட்க வேண்டும். இதில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும். பொது சிவில் சட்டத்தை திணிக்க கூடாது. அப்படி திணித்தால் அது இந்துத்துவா கொள்கைகளை புகுத்துவதற்கு சமம்.

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். சிறு வணிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ரூபாய் நோட்டுகளை மாற்றுவதால் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் வலுப்பெறாது.

பெரிய நிறுவனங்கள் தங்களது பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்தும், முன்வைப்பு வைத்தும் பதுக்கி வைத்துள்ளது. தொழில் அதிபர்கள் தங்கள் பணத்தை தங்க கட்டிகளாக மாற்றி வைத்துள்ளார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளால் கருப்பு பணத்தை மத்திய அரசு ஒழிக்க முடியவில்லை.

பன்னாட்டு நிறுவனங்களை கண்காணித்து வரியை வசூல் செய்ய வேண்டும். யார் கருப்பு பணம் வைத்து இருக்கிறார்கள் என்று மத்திய அரசுக்கு தெரியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனித்து வருகிறார். தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலை சரியாக வழங்கப்படவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன் முழுவதுமாக வழங்கப்படவில்லை. அரசு ஆசிரியர் நியமனத்தில் முறை கேடு நடந்து வருகிறது. இதுபோன்ற நிலை தொடர்ந்து ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!