
திருவள்ளூரில் கடும் பணத் தட்டுப்பாடு நிலவி வருவதையொட்டி, பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடமாடும் ஏடிஎம் மையம் மூலம் பணம் வழங்கப்பட்டது.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் பல்வேறு வகையில் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.
இதுவரை பண மாற்றத்தின் போது 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
அனைத்து ஏடிஎம் மையங்களிலும் குறிப்பிட்ட அளவு என்றில்லாமல், வேண்டிய அளவுக்கு பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த நிலையில் மக்களின் சிரமத்தை போக்கும் வகையில், திருவள்ளூரில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடமாடும் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டது.
வங்கியின் துணைப் பொதுமேலாளர் புவனேஸ்வரி இதைத் தொடங்கி வைத்தார்.
கூடுதல் பொதுமேலாளர் பிரேம்ஜி தன்னுடன் எடுத்துச் சென்ற இயந்திரத்தில் பொதுமக்களின் ஏடிஎம் அட்டைகளைத் தேய்த்து ஒவ்வொருவருக்கும் அவர்களது வங்கிக் கணக்குகளிலிருந்து தலா ரூ. 2,000 வரை வழங்கினார்.
முதல்கட்டமாக திருவள்ளூர் நகரில் தொடங்கிய இத்திட்டம், விரைவில் கிராமங்களில் விரிவுபடுத்தப்படும் என புவனேஸ்வரி தெரிவித்தார்.