
ஜெயலலிதா உடலைப் போன்று பொம்மை அமைத்து பிரச்சாரம் மேற்கொண்ட பன்னீர் செல்வம் அணிக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைதேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் இரண்டொரு நாட்களே எஞ்சியுள்ளதால் உச்சகட்ட பரப்புரையில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். எப்படியாவது வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காக அதிமுகவின் இரு அணிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இந்தச் சூழலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து மு.க.ஸ்டாலின் ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் இன்று மாலை தீவிர வாக்குசேரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது ஜெயலலிதாவின் இறந்த உடலைப் போன்று பொம்மையை வைத்து பன்னீர் அணியினர் பிரச்சாரம் மேற்கொண்டதை அவர் மிகக் கடுமையாகச் சாடினார். இதை விட வெட்கரமானது எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் மிக மோசமான தொகுதி ஆர்.கே. நகர் தான் என்று குறிப்பிட்டார்.
இந்த தொகுதிக்கு மருதுகணேஷ் மட்டும் போதாது தானும் இணைந்து செயல்படப் போவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.