
அதிமுக அரசின் திட்டங்களை மக்களுக்கு சேரவிடாமல் தடுப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஒரே போடாக போட்டார்.
திருவாரூரில் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
“ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்பட்டது. தற்போதும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நியாயவிலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை தொய்வின்றி வழங்கப்படுகின்றன.
தமிழகத்துக்கு மத்திய அரசு 54 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்குவதற்குப் பதில் 27 ஆயிரம் கிலோ லிட்டர் மட்டுமே வழங்குகிறது. இதற்கு காங்கிரஸ் - திமுகவே காரணம்.
சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் பருப்பு, பாமாயில் நல்ல முறையில் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 30.6.2012 அன்று மத்திய அரசு சிறப்புத் தொகுப்புத் திட்டத்துக்கு வழங்கி வந்த மானியத்தை நிறுத்தியது.
ஆனால், தமிழக அரசு இதற்காக ரூ.1800 கோடி கூடுதல் செலவாக எடுத்துக் கொண்டு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்தது.
இத்திட்டம் 6 மாதத்துக்கு ஒரு முறை நீட்டிப்பு வழங்க வேண்டும். அந்த நீட்டிப்புக் காலம்தான் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஆனால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பிற அரசியல் கட்சியினர் நியாயவிலைக் கடைகளில் எந்த பொருளும் இல்லை என்று அரசியலுக்காக பேசி வருகின்றனர்.
ஜெயலலிதா வகுத்த திட்டங்களை தற்போது அதிமுக அரசு மக்களுக்கு செயல்படுத்தி வருகிறது.
அதிமுக அரசின் திட்டங்களை மக்களுக்கு சேரவிடாமல் தடுப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்” என்று அமைச்சர் அதிரடியாக தெரிவித்தார்.