
கட்டாயமாக ரூ.5 ஆயிரம் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும் என்ற திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி கைவிடவேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
“பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக மாநகரப் பகுதியில் ரூ.5 ஆயிரம், நகரப்பகுதியில் ரூ.3 ஆயிரம், கிராமப் பகுதியில் ரூ.2 ஆயிரம் வைத்திருக்க வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும் என திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏப்.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது நடுத்தர மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தால், வங்கி மூலம் மாத ஊதியம் பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இத்தகைய பிரிவினர் கடன் உள்ளிட்ட பிடித்தங்கள்போக சொற்ப தொகையையே ஊதியமாகப் பெறுகின்றனர். அதில் குறிப்பிட்ட தொகையை நிரந்தர இருப்பாக வைத்திருப்பது என்பது இயலாதது. இதைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை வங்கி கைவிட வேண்டும்.
மேலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் வங்கி கணக்குகளை ஊதிய கணக்குகளாக மாற்ற வேண்டும்.
ஒன்றியங்களில் செயல்படும் நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள தாற்காலிக துப்புரவுப் பணியாளர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்டத் தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பொருளாளர் அ. ஜோன்ஸ் ஐன்ஸ்டீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஈவேரா, மாநில துணைச் செயலர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.