
கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-இன் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ''இன்றைக்கு நாடு எப்படிப்பட்ட சூழலில் இருக்கிறது என்று நான் அதிகம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிலும், இஸ்லாமிய மக்களான நீங்கள், எப்படிப்பட்ட அச்சுறுத்தலை எதிர்கொள்கிறீர்கள் என்று உலகத்திற்கே தெரியும்.
இப்படிப்பட்ட நிலையில், நான் உறுதியோடு சொல்கிறேன், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இன்றைக்கு இருக்கும் ஒரே மாநிலம், தமிழ்நாடுதான். அதற்குக் காரணம் திமுக. தி.மு.க.தான் சிறுபான்மையின மக்களைக் காக்கும், காவல் அரண்! அதனால்தான், -இங்கு உணவு அரசியல் கும்பல் வன்முறை இன்றைக்குத் தலையெடுக்காமல் இருக்கிறது.
இந்த அமைதிச் சூழல் சிலரின் கண்களை உறுத்துகிறது. தமிழ்நாட்டில் எப்படியாவது குழப்பம் ஏற்படுத்தலாமா என்று அவர்கள் போடும் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதனால், தங்களுக்கு ஏற்ற அடிமைகளாக இருக்கும், E.D. - C.B.I.-I.T. இதுபோன்ற அமைப்புகளை வைத்து மிரட்டி, தங்களுக்கான கூட்டணியாக உருவாக்கி இன்றைக்கு மேடை ஏறியிருக்கிறார்கள்.
பத்து தோல்வி பழனிசாமி
துரோகங்களுக்கான அர்த்தமாக அகராதிகளில் இடம்பிடித்திருக்கும், பத்து தோல்வி பழனிசாமி முஸ்லிம்களுக்கு எதிரான தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறார். பழனிசாமி துரோகங்களை நாம் எண்ணிப் பார்த்தால், அது சீனப் பெருஞ்சுவரைப் போன்று நீளமானது! அவருக்குத் தெரிந்ததெல்லாம் இரண்டே இரண்டுதான். ஒன்று - காலில் விழுவது, இன்னொன்று - கால்களை வாரி விடுவது! அப்படிப்பட்டவர் முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செய்த துரோகங்களின் பட்டியல் நீளமானது.
அ.தி.மு.க.வின் சதி
இஸ்லாமியர்கள் -கிறித்துவர்கள் என்று, சிறுபான்மை மக்களுக்கு எதிரான அ.தி.மு.க.வின் சதி எண்ணத்தை நீங்கள் உணர வேண்டும். இந்த 2026 தேர்தல் களம், தமிழ்நாட்டின் நலனைக் காக்கும் நமக்கும், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான பிரதமர் மோடிக்கும் நடக்கும் தேர்தல்'' என்று கூறியுள்ளார்.
5 அதிரடி அறிவிப்புகள்
மேலும் முதல்வர் ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்கு 5 அறிவிப்புகளையும் வெளியிட்டார். 1.தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவுபெற்றுள்ள 1,537 உலமாக்களுக்கு 5 ஆயிரம் ரூபாயாக ஓய்வூதியமும், 2 ஆயிரத்தி 500 ரூபாயாகக் குடும்ப ஓய்வூதியமும், உயர்த்தி வழங்கப்படும்.
2. உலமாக்கள் நலவாரியத்தில் 15 ஆயிரத்தி 60 உலமாக்கள் இருக்கிறார்கள். முதற்கட்டமாக இதில், ஆயிரம் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான அரசு மானியத் தொகை, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
3. ஏற்கனவே சென்னை மற்றும் மதுரையில் வக்பு தீர்ப்பாயம் செயல்பட்டு வரும் நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூடுதலாக ஒரு வக்பு தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
4. கல்லறைத் தோட்டம் மற்றும் கபரிஸ்தான்கள் இல்லாத இடங்களில் மாநகராட்சிகளால் அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டு, அவை அமைக்கப்படும்.
5. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கும் 10 உருதுமொழி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.