உடன்பிறப்பு… என் ஊர்க்காரர்… கவிஞர் பிறைசூடன் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

By manimegalai aFirst Published Oct 8, 2021, 9:20 PM IST
Highlights

கவிஞர் பிறைசூடன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார்.

சென்னை: கவிஞர் பிறைசூடன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார்.

திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் இன்று சென்னையில் காலமானார். இதயம், பணக்காரன், கேளடி கண்மணி உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார். 400க்கும் மேற்பட்ட படங்களில் கிட்டத்தட்ட 1400 பாடல்களை படைத்தவர்.

அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் கவிஞர் பிறைசூடன் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியின் விவரம் வருமாறு:

நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கும் என் ஊர்க்காரர். உடன்பிறப்பு என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர்.

திருவாரூர் மண்ணில் இருந்து புறப்பட்டு திரையிசையில் தனக்கென தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.

பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய அவரது மறைவு தமிழ் திரையியுலகுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

click me!