
திமுக தலைவர் கருணாநிதியின் முரட்டுபக்தன் என அழைக்கப்படும் என்.பெரியசாமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வந்தவர் என்.பெரியசாமி. தி.மு.க. தலைவர் கருணாநிதியால் முரட்டுபக்தன் என அனைவராலும் அழைக்கபடுபவர்.
இவர் கடந்த பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ, பில்ரோத், நியூ ஹோப் ஆகிய மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வந்தார்.
இறுதியாக சென்னை நியூ ஹோப் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தபோது, பெரியசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து என்.பெரியசாமியின் உடல் சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு தகவலறிந்து வந்த தி.மு.க. நிர்வாகிகள் பெரியசாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதில் திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் ஏராளமான பொதுமக்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைதொடர்ந்து இன்று என்.பெரியசாமியின் இறுதி ஊர்வலம் போல்பேட்டை அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு கீதா ஹோட்டல் வழியாக புதிய பேருந்து நிலையம், அம்மா காய்கறி கடை வழியாக திரும்பவும், போல்பேட்டை மெயின் ரோடு வழியே போல்பேட்டையை அடைந்தது.
அங்கு அவரது சொந்த இடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் அவருக்கு மவுன அஞ்சலியை செலுத்தினர்.
இறுதி ஊர்வலத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர். முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு,பெரியகருப்பன், பூங்கோதை , எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., தங்கம் தென்னரசு, பொங்கலுார் பழனிச்சாமி, பிச்சாண்டி,எம்.பி திருச்சி சிவா, ,முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் எம்எல்ஏ.,க்கள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டனர்.