
நான் என்ன சாப்பிடுவது? என் தட்டில் என்னென்ன உணவுகளை வைத்து சாப்பிடுவது என்பது எனது தனிப் பட்ட உரிமை எனவும், இதைதான் சாப்பிட வேண்டும் என தடை விதிக்க முடியாது எனவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு காட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட ஏனைய காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுகுறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது என தமிழ்நாட்டை சேர்ந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஏனைய அரசியல் தலைவர்கள் மாட்டிறைச்சி தடைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு கூறியதாவது:
நான் என்ன சாப்பிடுவது? என் தட்டில் என்னென்ன உணவுகளை வைத்து சாப்பிடுவது என்பது எனது தனிப் பட்ட உரிமை. ஆனால் இதை தான் சாப்பிட வேண்டும். இந்த மாதிரி ஆடை, அணி கலன்தான் அணிய வேண்டும் என்று யாராலும் கட்டுப்பாடு விதிக்க முடியாது.
இந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதை ஏன் தடை செய்யவில்லை? அவர்களின் நண்பர்கள், அவர்களுக்கு வேண்டியவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தானே.
செடி, கொடிகளுக்கும் உயிர் உண்டு. அப்படியானால் காய்கறி, பழங்களையும் சாப்பிடக் கூடாது என்பார்களா?
சுவாசிக்கும் காற்றில், கூட உயிரினங்கள் இருக்கிறது. அவை வதைபடும் என்பதற்காக சுவாசிக்க கூடாது என்பார்களா?
இவ்வளவு பேசும் பா.ஜகவினர் தோல் பொருட்களை பயன்படுத்துவதை முதலில் கைவிட வேண்டும். லெதர் பைகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
காலில் செருப்பு அணியாமல் நடமாட தயாரா? பெல்ட் கட்டுபவர்கள் இனிமேல் பெல்ட் அணிய மாட்டேன். நாடா கயிறுதான் கட்டுவேன் என்று சொல்ல தயாரா?
மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக எத்தனை பேரை சாகடித்தார்கள்? இந்த சம்பவங்கள் அனைத்தும் பா.ஜக ஆளும் மாநிலங்களில்தான் நடந்தது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் இருந்துதான் 40 சதவீத தோல் ஏற்றுமதி நடக்கிறது. இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்யப் போகிறார்?
தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தமாக அனைத்து கட்சிகளும் மாட்டிறைச்சிக்கான தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் முதலமைச்சர் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று மழுப்புகிறார்.
காரணம் மத்திய அரசின் ஆதரவு கிடைக்காமல் போய் விடுமோ? என்ற பயம் தான். முதலில் மக்கள் பிரச்சினையை பாருங்கள். அதன் பிறகு கட்சி பிரச்சினையை பாருங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.