
புதிதாக பேரூராட்சிகளை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து நூதன முறையில் பேரூராட்சி ஊழியர்கள் அலுவலகத்தில் வேலை செய்து போராட்டம் நடத்தினர்.
“பேரூராட்சிகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது,
புதிதாக பேரூராட்சிகளை உருவாக்க அரசு முன்வர வேண்டும்.
பணிச்சுமைகள், அதிக பொறுப்புகள் ஆகியவற்றை உணர்ந்து ஊழியர்களின் சிரமம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும்,
பணிமூப்பு பட்டியல் நடப்பு ஆண்டு வரை வெளியிட்டு உரிய ஊதியத்துடன் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்” என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து முதல்கட்டமாக, காலை முதல் மாலை வரை, மதுரை மாவட்டம், பேரையூர், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் பணிபுரியும் செயல் அலுவலர், இளநிலை உதவியாளர், வரிதண்டலர், குடிநீர் பணியாளர், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் வேலை செய்தனர்.
மேலும், வருகிற 10-ஆம் தேதி வரை கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்தே தாங்கள் பணி செய்ய உள்ளோம் என்று தெரிவித்தனர்.
அதேபோன்று, வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு பேரூராட்சிதுறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணியாளர்கள் நேற்று முதல் பணியின்போது பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
இதற்கு மாநில இணை அமைப்பாளர்களான பிச்சைமுத்து தலைமை தாங்கினார்.