
நூறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே தரப்படுவதால் அதனை எதிரித்து சாலை மறியல் போராட்டம் செய்த 10 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் அருகே கிளியனூர் பகுதியில் நூறு நாள் வேலை திட்டத்தில் ஏராளமான விவசாய தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு ரூ.208 சம்பளம் என்று அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், அதை முழுமையாக வழங்காமல், ரூ.100 மட்டுமே வழங்கப்படுகிறது. கேள்வி கேட்டால், அவ்வளவு தான் தரமுடியும் என்று மிரட்டுகின்றனர் என்று விவசாய தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளத்தை நியாயமாகவும், முழுமையாகவும் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கம் கிளியனூரில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்துக்கு கிளியனூர் கிராம விவசாய சங்க தலைவர் சுபா தலைமை வகித்தார்.
இந்தப் போராட்டத்தில், “நூறு நாள் வேலையை 200 நாள்களாக நீட்டிக்க வேண்டும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சாலை மறியலில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கணபதி, ஒன்றிய செயலாளர் அறிவழகன், ஒன்றிய தலைவர் மாரிமுத்து, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்வகுமார், ராமதாஸ், சதீஷ் மற்றும் நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
இதுபற்றி தகவலறிந்த குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சன், சம்பவ இடத்திற்கு வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் போராட்டக்காரர்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேரை பெரம்பூர் காவலாளர்கள் கைது செய்து அழைத்துச் சென்றனர்.