
கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர், 11 மீனவர்களை சிறைபிடித்து சென்றது மீனவர்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையினர் கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர் நடவடிக்கையாக உள்ளது. இந்த கொடூர தாக்குதலினால், இதுவரை பல மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஒரு வாரகால இடைவெளிக்கு பிறகு, இன்று அதிகாலை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள், நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபொழுது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர், திடீர் தாக்குதல் நடத்த துவங்கினர். இதனால், பதற்றமடைந்த மீனவர்கள் தப்பிக்க முயற்சித்தனர். ஆனால், அவர்களின் படகுளில் புகுந்து அவர்களை சரமாரியாக தாக்கியதோடு மட்டுமில்லாமல், அவர்களின் வலைகள் உள்ளிட்ட கருவிகளையும் சேதப்படுத்தினர்.
மேலும், தமிழக மீனவர்கள் 11 பேரையும், அவர்களின் 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். இதனால் தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதரத்தை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்குமா என ஏங்கும் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டெல்லியில் மத்திய,மாநில அமைச்சர்கள், தமிழக மீனவர்கள்,இலங்கை அமைச்சர்கள்,இலங்கை மீனவர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டத்தில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என இலங்கை அரசு உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒப்பந்தத்தை இலங்கை மீறியது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.