
சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த ஊழியர், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை தி.நகரில் உள்ள நடேசன் சாலையில் சரவணா செல்வரத்தினத்தின் நகைக்கடை,ஜவுளிக்கடை, பாத்திரக்கடை ஒரே கட்டிடத்தில் இயங்கிவந்தது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்காக, அதே கட்டடத்தில் உணவகம் ஒன்றும் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 15 ம் தேதி, உணவகத்தில் உள்ள கியாஸ் வெடித்ததில் 4 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, மாம்பலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த மூர்த்தி என்பவர், சற்றுமுன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் சரவணா செவரத்தினம் கடையின் உரிமையாளரிடம் எவ்வித விசாரணையும் எடுக்கவில்லை எனவும்,போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும் மூர்த்தியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், கவனக்குறைவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.