இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இன்று 13 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்கள் கைது- இலங்கை கடற்படை அட்டூழியம்
மீன்படி தொழில் தான் மீனவர்களின் வாழ்வாதரமாக உள்ளது. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி அவ்வப்போது இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் மீன் பிடிப்பது அவர்களின் உரிமை. அதற்காக அவர்களை கைது இலங்கை அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அதையும் மீறி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தொடர்ந்து கைது செய்வது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும் என இலங்கைக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
13 மீனவர்கள் - 3 படகுகள்
எனவே இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலை இந்தியா அனுமதிக்கக் கூடாது எனவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதனை மதிக்காத இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறது. மீனவர்கள் கைது சம்வத்திற்கு கண்டனம் தெரிவித்து மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களின் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.