எழுத்து பிழையுடன் புதிய 2 ஆயிரம் ரூபாய் …? - இன்டர்நெட்டில் பரவும் இம்சை சர்ச்சை

First Published Nov 13, 2016, 12:20 AM IST
Highlights


மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டில் எழுத்து பிழை இருப்பதாக சமூக வலை தளங்களில், இம்சையான சர்ச்சை பரவி வருகிறது.

இந்தியா முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து, அந்த பணத்தை வைத்திருந்த மக்கள், சில்லறையாக மாற்ற பல்வேறு கடைகளுக்கு படை எடுத்தனர்.

சிலர் பெட்ரோல் பங்க்குகளிலும், டாஸ்மாக் கடைகளிலும் மாற்றி கொண்டனர். ஆனாலும், அங்கேயே போதிய அளவுக்கு சில்லறை இல்லாததால், பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நகைக்கடைகளுக்கு படையெடுக்க தொடங்கினர். இதையொட்டி நேற்று இரவு முதல் இன்று காலை வரை நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதியது.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சென்னையில் ஏராளமானோர் தங்கி வேலை செய்கின்றனர். இதில் பெரும்பாலானோர் மேன்ஷன்களில் தங்கியுள்ளனர். இவர்களிடம் பணம் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், அவர்களுக்கு சாப்பிட பணம் இல்லை.

இதையடுத்து, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதன்பின்னர், பல்வேறு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வாயிலாக மக்கள் நீண்ட வரிசையில் நின்று மாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்து நின்று புதிய 2000 ரூபாயை ஆசை, ஆசையாக வாங்கி சென்றனர். அந்த நோட்டுடன் ‘செல்பி’ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடவும் செய்தனர். புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டில் தமிழ், இந்தி, மராத்தி உள்பட 15 மொழிகளில் 2 ஆயிரம் ரூபாய் என எழுதப்பட்டுள்ளது.

இதில் 6வதாக இந்தியில் எழுதப்பட்டுள்ளது. அதில் எழுத்து பிழை உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ‘தோ ஹஜார் ருபயா’ என்று குறிப்பிடுவதற்கு பதிலாக தவறாக ‘தோன் ஹஜார் ருபயா’ என எழுதப்பட்டுள்ளது. இதை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

அவசர அவசரமாக ரூபாய் தாள்கள் அடிக்கப்பட்டதால் இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் சிலர் கூறுகின்றனர்.

click me!