
‘ஆசியாவிலேயே முதல் முறையாக காட்டு யானைக்கு அறுவை சிகிச்சை செய்தோம்’ என்கிற டைட்டிலுடன் சில நாட்களாக ஏகத்துக்கும் சீன் போட்டது கோயமுத்தூர் மாவட்ட வனத்துறை. ஆனால் யானை இறந்து போய்விட, இப்போது மிரட்சியாய் முழித்தபடி நிற்கிறார்கள்.
கோயமுத்தூர் மாவட்டம் ஆனைகட்டிக்கு அருகே கொண்டனூர் வன கிராமத்தின் அருகே நன்கு வளந்த ஆண் யானை ஒன்று கடந்த சில நாட்களாக பகலிலும் சுற்றிக் கொண்டிருந்தது. அதனால் சரியாக நடக்க முடியவில்லை. அதன் பிறகுதான் தெரிந்தது அதன் காலில் பெரிய புண் இருப்பது. வனத்தினுள்ளே இருக்கும் போதே யானை இந்த புண்ணால் அவதிப்பட்டு நடக்க முடியாமல் இருந்ததை நிச்சயம் வனத்துறை ஊழியர்கள் பார்த்திருப்பார்கள்தான். ஆனால் கண்டுகொள்ளப்படவில்லை.
ரணம் பட்ட காட்டு யானை ஊர் ஓரமாகவே சுற்றுவதை பார்த்த பிறகு வன உயிரின ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்ததால் வனத்துறை சிகிச்சை மூவ்களில் இறங்கியது. வன கால்நடை மருத்துவர்கள் மயக்க மருந்து ஊசியை துப்பாக்கியால் சுட்டு செலுத்தி யானைக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இவர்களால் தனக்கு எந்த துன்பமுமில்லை என்று நம்ப துவங்கிய யானை சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைத்ததோடு, அவர்கள் தரும் ஆரோக்கியமான உணவையும் வாங்கி சாப்பிட்டது.
இந்நிலையில் ‘காட்டு யானைக்கு வெற்றிகரமாக ஆபரேஷனை முடித்தோம்.’ என்று வனத்துறையும், வன கால்நடை மருத்துவர்களும் பந்தாவாக அந்த பேஷண்ட் யானை முன் நின்று செல்ஃபி, போட்டோ எல்லாம் எடுத்துவிட்டு அதை வனத்திற்குள் முடுக்கிவிட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் அந்த யானை இறந்துவிட்டது. ’ஆபரேஷன் சக்ஸஸ் பட் பேஷண்ட் இஷ் டெட்’ என்பது போல் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதில் நொந்துவிட்டது வனத்துறை மற்றும் வன கால்நடை டாக்டர்கள் டீம்.
இப்போது ‘யானை ஏன் இறந்தது, சூப்பர் சிகிச்சை என்று சீன் போட்டீர்களே, அதையும் தாண்டி அது ஏன் இறந்தது? உடலில் புண்ணோடு யானை வனத்திற்குள் சுற்றும் போதே ரோந்து சென்ற வனத்துறையினர் அதை கவனிக்கவில்லையா? கவனித்தும் சிகிச்சை தராமல் விட்டுவிட்டீர்களா? வன கால்நடை மருத்துவர்களில் திறமையான நபர்கள் தமிழகத்தில் இல்லையா? என்னதான் உங்கள் பிரச்னை, சிகிச்சை செய்தும் தொடர்ந்து யானைகள் இறப்பது ஏன்?’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு தமிழக வன துறையை உருட்டி எடுத்து வருகிறார்கள் உயிரின ஆர்வலர்கள்.
க்கும்! மனுஷன் செத்தாலே பெருசா மதிக்காத தேசத்துல யான செத்ததுக்கா பதில் சொல்லப்போறாங்க? என்று இதை இணையத்தில் வறுத்தெடுக்கின்றனர் ஆதங்கப் பேர்வழிகள்.