
உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் அடுத்த மாதம் 12-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று திருப்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் சங்கர் . இவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகள் கவுசல்யாவும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து வந்தனர்.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவ இவர்கள் 2 பேரும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இதற்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதைதொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் சங்கர்-கவுசல்யாவை சரமாரியாக வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயத்துடன் கவுசல்யா உயிர் தப்பினார்.
இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமன் பாண்டித்துரை, மற்றும் செல்வகுமார், மதன், ஜெகதீசன், மணிகண்டன், கலை தமிழ்வாணன், மற்றொரு மணிகண்டன், தன்ராஜ், பிரசாந்த் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.
இவர்கள் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி, கூட்டுசதி, 5 பேருக்கு மேல் ஒன்று கூடுதல், வன்கொடுமை, பொதுஇடத்தில் கொடூரமான ஆயுதத்தால் தாக்குதல், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணை அனைத்து முடிவுற்ற நிலையில், வரும் டிசம்பர் 12 ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.