
கோவை மாவட்டம், போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் மகாலட்சுமி. இவர் செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், மகாலட்சுமி, தனது தந்தை மாரிமுத்துவுடன், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு வந்த மகாலட்சுமி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய மாணவி மகாலட்சுமி, நான் படிக்கும் பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும், பள்ளியில் சேரும் கழிவுநீரையும், கற்களையும், மாணவர்களைக் கொண்டே அகற்ற சொல்வதாகவும் பள்ளி மீது
குற்றம் சாட்டினார்.
பள்ளியில் சிறு குழந்தைகளுடன் தமிழில் பேசினால் அபராதம் விதித்ததாகவும், கடந்த வாரம் சிறு குழந்தைகளுடன் தமிழில் பேசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தமிழில் பேசியதற்காக அபராதம் விதித்ததால் பேருந்தில் வர முடியாமல் நடந்தே வீட்டுக்கு வந்ததாகவும் மகாலட்சுமி கூறினார். பள்ளியின் விளையாட்டு ஆசிரியர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் மாணவி தெரிவித்தார். எனவே பள்ளி நிர்வாகம் மீது உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவி மகாலட்சுமி புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாணவி மகாலட்சுமியின் தந்தை கூறும்போது, இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினால், பெற்றோர்களை தரக்குறைவாக பேசுகின்றனர். இதனால் மனவேதனை அடைந்த நான் ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்ததாக கூறினார். இது போல், மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகவும், பலர் வீட்டில் சொல்லக்கூட பயந்து கொண்டிருப்பதாகவும் மாரிமுத்து கூறினார்.