
தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 5வது முறையாக தாக்கல் செய்து விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடிப்பரப்பு, உற்பத்தியினை அதிகரித்து சர்க்கரை ஆலைகள் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கவும், கரும்பு உழவர்கள் கூடுதல் வருவாய் பெறும் வகையிலும், 2024-2025 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்து கரும்பு வழங்கிய தகுதியுள்ள உழவர்களுக்கு, ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல், முன் எப்போதும் இல்லாத அளவில், டன் ஒன்றுக்கு 349 ரூபாய், சிறப்பு ஊக்கத்தொகையாக
உயர்த்தி வழங்கப்படும்.
இதனால் கரும்புக்கு, டன் ஒன்றிற்கு 3,500 ரூபாய் வழங்கப்பட்டு, சுமாார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கரும்பு உழவர்கள் பயன்பெறுவர். இதற்கென, 297 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம்
அதிக சர்க்கரைக் கட்டுமானம், பூச்சி, நோய்த் தாக்குதலுக்கு எதிர்ப்புப் பண்புகளைக் கொண்ட புதிய கரும்பு இரகங்களை உழவர்கள் அதிக பரப்பில் சாகுபடி செய்திடவும், சாகுபடி செலவைக் குறைக்கும் விதமாக கரும்பு விதைக்கரணைகள், நாற்றுகள், இயந்திர அறுவடைக்கு ஏற்ற அகலப்பார் நடவு முறை நுண்ணூட்ட உரக்கலவை, தோகை தூளாக்குதல், நிலப்போர்வை அமைத்தல் போன்ற இனங்களை கரும்பு உழவர்களுக்கு மானிய விலையில் வழங்கவும் ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து 10 கோடியே 53 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.