கோடை வெயிலில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தமிழக அரசு அறிவுறுத்தல்!

By Manikanda Prabu  |  First Published May 9, 2024, 7:06 PM IST

கோடை வெயிலில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், ஏராளமான பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

Tap to resize

Latest Videos

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரிவெயிலும் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பத்தின் அளவு பதிவாகி வருகிறது.

இந்த சூழலில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் என கூறி மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறுத்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை காலத்திற்கான வெப்ப அலை குறித்த அறிவிக்கையில், நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்பப் பகுதிகளில் மார்ச்சு முதல் மே 2024 வரை அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்றும், வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-50 C வரை அதிகமாக பதிவாகியுள்ளது.  

இலவச ரேஷன் திட்டத்தை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதா? சர்ச்சையான பிரியங்கா காந்தி பேச்சு!

இதனைத் தொடர்ந்து, வெப்ப அலையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே எனது தலைமையிலும், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் தலைமையிலும் பல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் 16.5.2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-400 C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால், பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது.

வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!