
அரிமளம் பகுதியில் பன்றி காய்ச்சலால் ஏழு வயது சிறுமி இறந்ததன் எதிரொலியாக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட சிரயம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் அமல்ராஜ் இவருடைய மகள் ஜனனி (வயது 7). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் ஜனனி பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவின்பேரில் மருத்துவ இணை இயக்குனர்கள் பரணிதரன், கலைவாணி ஆகியோர் வழிகாட்டுதல்படி அரிமளம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் முத்துராஜா தலைமையில் அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இந்த மருத்துவ முகாம் மூலம் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்த முகாமில் “பன்றி காய்ச்சல் ஒரு வகையான வைரஸ் மூலம் பரவுகிறது. பன்றி காய்ச்சல் ஏற்பட்டால் சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி, தொண்டை வலி போன்றவை மற்றும் ஒரு சிலருக்கு வாந்தி அல்லது வயிற்றுப் போக்கும் ஏற்படலாம்.
பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க கைகளை வெளியில் சென்று வந்தவுடனும் சாப்பிடும் முன்பும் சோப்பு போட்டு கழுவ வேண்டும். பன்றி காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களிடம் சற்று தள்ளி இருக்க வேண்டும்” என்பது போன்ற பல்வேறு அறிவுரைகள் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசர்குளம், ஆவுடையார்கோவில், புதுக்கோட்டை ராஜகோபாலபுரம், அரிமளம் ஆகிய ஊர்களில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பன்றி காய்ச்சல் தொற்று ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு எதிர்ப்பு சக்தி மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் நிலவேம்பு கசாயமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பன்றி காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.