தீபம் பார்க்கச் செல்லும் அடியார்களுக்காக 2000 சிறப்புப் பேருந்துகள்..

First Published Nov 28, 2016, 10:52 AM IST
Highlights


புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் அடியார்களுக்காக 2000 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் முடிவு எடுத்துள்ளது.

திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. இந்தத் திருவிழாவைக் காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான அடியார்கள் வந்து, செல்கின்றனர்.

இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா வரும் டிசம்பர் 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 8-ஆம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 9-ஆம் தேதி காலை 6.05 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் பிள்ளையார் தேரோட்டமும் நடைபெறுகின்றன.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா, டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகின்றன.

இந்நிலையில், தீபத் திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்த அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகித்தார்.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி, மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, கோயில் இணை ஆணையர் எஸ்.ஹரிப்பிரியா, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, தீபத் திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கிப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில், தீபத் திருவிழாவுக்கு வரும் பல இலட்சம் அடியார்களின் நலன் கருதி தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,000 சிறப்புப் பேருந்துகளை 7,000 முறை இயக்க முடிவு செய்யப்பட்டது.

தீபத் திருவிழா நடைபெறும் டிசம்பர் 12-ஆம் தேதி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் மொத்தம் 15 இடங்களில் அவசர ஊர்திகளை தயார் நிலையில் நிறுத்தவும், 10 இருசக்கர அவசர ஊர்திகளை தயார் நிலையில் நிறுத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் 2 ஐஜிக்கள், 4 டிஐஜிக்கள், 18 எஸ்.பிக்கள், 80 டிஎஸ்பிக்கள் உள்பட மொத்தம் 8,910 போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் கூடுதல் செல்லிடப்பேசி கோபுரங்களை 3ஜி இணையதள வசதியுடன் அமைக்கவும், சிறப்பு இரயில்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், எம்பிக்கள் ஆர்.வனரோஜா, செஞ்சி வே.ஏழுமலை, அதிமுக தெற்கு மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் வாசுநாதன் உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள், கோயில் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

click me!