கொரோனா அச்சுறுத்தல்... சட்டமன்ற கூட்டத்தொடர் இது இல்லாமல் நடைபெறும்... சபாநாயகர் அப்பாவு அதிரடி!!

By Narendran SFirst Published Jan 3, 2022, 5:26 PM IST
Highlights

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த ஆண்டை போன்றே டிஜிட்டல் முறைப்படி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த ஆண்டை போன்றே டிஜிட்டல் முறைப்படி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு 2020ஆண்டு மார்ச் மாதம் வரை புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டத்தை நடத்தினார்கள். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று அதிகம் பரவத் தொடங்கியதை அடுத்து தனி மனித இடைவெளியை அதிகரிக்கும் வகையில் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்று வந்த சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு 2020 செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆளுநர் உரை, அதிமுக ஆட்சியின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடரும் கலைவாணர் அரங்கத்தில் தான் நடத்தப்பட்டது. மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகும் கலைவாணர் அரங்கத்தில் தான் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்வு, கவர்னர் உரை, மானிய கோரிக்கை மீதான விவாதமும் கலைவாணர் அரங்கில் நடந்த சட்டசபையில் தான் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்துவிட்டதால் இனிமேல் அடுத்த சட்டசபை கூட்டத்தொடரை கலைவாணர் அரங்கில் நடத்துவதற்கு பதிலாக பாரம்பரியம் மிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய சட்டமன்றத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கோட்டையில் உள்ள சட்டசபையை புதுப்பொலிவாக்கும் பணிகள் நடைபெற்றன. அங்குள்ள பேரவை மண்டபத்துக்கு பெயிண்ட் அடிப்பது, மேஜை, நாற்காலிகளை சுத்தம் செய்வது, வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. கலைவாணர் அரங்கில் உள்ள தற்காலிக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு கம்ப்யூட்டர் வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது போல் கோட்டையில் உள்ள சட்டசபை அரங்கிலும் கம்ப்யூட்டர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் சட்டசபைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கிலேயே நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உரிய பாதுகாப்பு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த ஆண்டை போன்றே டிஜிட்டல் முறைப்படி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதுடன் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடித்து தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆளுநர் உரை முந்தைய கூட்டத்தொடர் போன்றே டிஜிட்டல் முறையில் பேப்பர் இல்லாமல் நடைபெறும். கூட்டத்தொடரை நேரலை செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். 2022 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் 5 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது என்று தெரிவித்தார். கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.ரன்.ரவியை சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

click me!